பாடலாசிரியர் நா.முத்துக்குமார்

தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான நா.முத்துக்குமார் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

muthukumar

இயக்குனர் சீமானின் வீர நடை திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமான நா.முத்துக்குமார் [வயது 41] பத்து ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் 1000க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை இயற்றியுள்ளார்.
2005இல் சிறந்த பாடலாசிரியருக்கான  தமிழக அரசின் விருது வென்ற முத்துக்குமார், 2013ம் , 2014ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து இரு தேசிய விருதுகளையும் வென்றார்.
Na.Muthukumar

தி.மு.க தலைவர் திரு.கருணாநிதி தனது இரங்கலுரையில் ”திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் தன்னுடைய 41 வயதிலேயே மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த வருத்தமும் அடைந்தேன்.தமிழ்த் திரை உலகில் தன்னுடைய பாடல்களால் தனி முத்திரை பதித்த கவிஞர் முத்துக்குமார் ‘தங்கமீன்கள்’ திரைப்படத்தில் ஆனந்த யாழை மீட்டுகிறாள் என்ற பாடலுக்காகவும், ‘சைவம்’ திரைப்படத்தில் அழகே அழகே என்ற பாடலுக்காகவும் தேசிய விருதுகள் பெற்ற கவிஞர்.என் மீது மிகுந்த பற்றும் பாசமும் கொண்ட தம்பி நா.முத்துக்குமாரின் மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.

கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்ட நீண்ட  இரங்கல் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
”இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவு கொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்க இயலாதது. இது சாகும் வயதல்லை; சாதிக்கும் வயது.தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர். அவர் பெறவேண்டிய மூன்றாவது விருதைக் காலம் களவாடிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் திரையுலகில் அதிகம் எழுதியவர்; அழகாகவும் எழுதியவர்.”மழைமட்டுமா அழகு; வெயில் கூடத்தான் அழகு” என்று சொன்னவர், “வாழ்வு மட்டுமா அழகு; மரணம் கூடத்தான் அழகு” என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.”உன் சொந்த ஊர் எது தம்பி,” என்று ஒருமுறை கேட்டேன். “காஞ்சி அண்ணா,” என்று சொன்னார். “அண்ணாவே காஞ்சிதான்” என்றேன். கோவையில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில் என் தலைமையின் கவிதைபாட வந்தார். “சிறந்த வரிகளை அரங்கில் மீட்டு; நீ பிறந்த ஊர் காஞ்சி என்பதைக் காட்டு” என்று அவரை அறிமுகம் செய்தேன். இன்று மரணம் அவர் மெளனத்தையே கவிதையாக்கிவிட்டது.

அவர் வாழ்ந்த பெருமையை அவர் பாடிய பாடல்கள் பாடிக்கொண்டேயிருக்கும். நா.முத்துக்குமாரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும், கலை உலகத்துக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மரணத்தின் சபையில் நீதி இல்லை என்பதை மறுபடி உறுதிப்படுத்திக்கொள்கிறேன்”

உலகநாயகன் கமல்ஹாசன் தனது ட்விட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள்ளதாவது : “நியாயமில்லை. 41 சாகும் வயதில்லை ந.முத்துக்குமார் மிக மெதுவாய்ச் செய்த தன் நலம்பேணாத் தற்கொலையால் கோபமே. எனினுமவர் கவிக்கும் நட்பிற்கு நன்றி”.
muthu
தமிழ்க்கவிஞன் திரு நா.முத்துக்குமாரின் ஆத்மா சாந்தியடைய நாமும் இறைவனைப் பிரார்திப்போம்.
விருதுப்பட்டியல் :  Wikipedia